ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு; போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை
ஊரடங்கை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் துறையின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வீடியோக்கள், துறை சார்ந்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் அகன்ற திரை டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. அந்த டி.வி.யை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் துறையில் நடக்கும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் எல்.சி.டி. டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேர கொரோனா ஊரடங்கு அமலாகி உள்ளதால் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். அதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிமுறைகளும் தீவிரமாக பின்பற்றப்படும்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை முககவசம் அணியாத 50 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சீவலப்பேரி கோவில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில நபர்களை தேடி வருகிறோம். கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மரிய கிளாஸ்டன் ஜோஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.