நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மதியம் 12 மணிக்கு கடையை திறந்து இரவு 9 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும் அங்கு சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நெல்லையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று கம்புகளை கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இதில் மது பிரியர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அப்போது அவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வலியுறுத்தப்பட்டது. முககவசம் அணியாமல் மதுபாட்டில் வாங்க வந்த மதுப்பிரியர்களை கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பினார்கள். இதையடுத்து அவர்கள் வெளியே சென்று முககவசம் வாங்கி அணிந்து கொண்டு மீண்டும் கடைக்கு வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இரவு 9 மணிக்கு கடையை மூடும் நேரத்தில் மதுப்பிரியர்கள் அதிக அளவு கூடினார்கள். ஆனால் அவர்களுக்கு சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து மதுபாட்டில் வழங்கப்பட்டது.