பெண்ணிடம் நகை பறித்த ஊர்காவல் படை வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது
பெண்ணிடம் நகை பறித்த ஊர்காவல் படை வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை
மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த ஊர்காவல் படை வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை செல்லூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி விஜயலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.
அப்போது அந்த வழியாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து வந்தார். அவர் சம்பவம் குறித்து அறிந்து நகையை பறித்து சென்றவர்களை விரட்டி சென்றார்.
ஊர்காவல் படை வீரர் கைது
ஒரு கட்டத்தில் நகை பறித்து சென்றவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அதில் ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவன் 17 வயது சிறுவன் என்பதும், அவனுடன் வந்தவர் நரிமேட்டை சேர்ந்த அஜய்(22) என்பதும் தெரியவந்தது. இதில் அஜய் ஊர்காவல் படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அஜய் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.