இரவு நேர ஊரடங்கால் நெல்லை மாநகரம் வெறிச்சோடியது
இரவு நேர ஊரடங்கால் நெல்லை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை அறிவித்துள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு பிறகு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நெல்லை புதிய பஸ் நிலைய தற்காலிக பஸ் நிலையத்தில் இரவு 8 மணிக்கு பஸ்கள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 9 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இரவு 8-30 மணிக்கு நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் வாகனத்தில் ஆங்காங்கே சென்று கடைகளை 9 மணிக்கு அடைக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.
பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து இல்லாததாலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் நெல்லை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது. இருந்தாலும் ஆங்காங்கே சில சாலையோர கடைகள் இருந்தன. அந்த கடைக்காரர்களை போலீசார் எச்சரித்து கடையை அடைக்க செய்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் 23 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர்.
மேலும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் அனைத்து உதவி போலீஸ் கமிஷனர் களும், அனைத்து இன்ஸ்பெக்டர்களும் நேற்று மாநகரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.