தினமும் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது
அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.;
அரியலூர்:
கொரோனா தடுப்பூசி
அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் சராசரியாக 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது ஆதார் அட்டையுடன் வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு போன்ற சோதனைகள் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
பின்னர் அவர்களை அங்கேயே இருக்கச்செய்து, சிறிது நேரத்தில் அவர்களது உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா? என்பதை பரிசோதித்து, அதன்பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை என்று தலைமை மருத்துவர் ரமேஷ், டாக்டர் கண்மணி ஆகியோர் தெரிவித்தனர்.
அதிக படுக்கை வசதிகள்
மேலும் அடுத்த மாதத்தில்(மே) 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தரமான உணவுகள் வழங்கப்படுவதாகவும், நோய்த்தொற்று உள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனையில் படுக்கை வசதிகள் அதிகம் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.