கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
பாலமேடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது
அலங்காநல்லூர்
கொரோனா வைரஸ் 2-வது பரவல் காரணமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் பாலமேடு பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பஸ் நிலையம், வாரச்சந்தை, வலையபட்டி அவுட்டர் சாலை, விளக்குத் தூண் உள்பட 6 இடங்களில் ஒலிபெருக்கி மூலம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், முக கவசம் அவசியம் அணிய வேண்டும், கிருமி நாசினி மருந்தை தேவையான நேரத்தில் பயன்படுத்தவும், கொரோனா தடுப்பூசியை 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் போட்டு கொள்ள வேண்டும். சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, இளநிலை உதவியாளர் அங்கயர்கன்னி மற்றும் தூய்மை பணியாளர்கள், மகளிர் குழுவினர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகம், பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.