வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் மின் நிறுத்தம்

கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென மின் நிறுத்தம் ஏற்பட்டது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-04-20 19:53 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. இதில் கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வாக்‌கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. 

மின்சாரம் நிறுத்தம்

இந்நிலையில் நேற்று இரவு 10.15 மணி அளவில் திடீரென புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அதேபோல் வாக்கு எண்ணும் மையமான பெரியார் அரசு கல்லூரியிலும் மின் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் உடனடியாக ஜெனரேட்டரை இயக்கவில்லை.
இது பற்றி தகவல் அறிந்ததும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தி.மு.க. முகவர்கள் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

அதன்பேரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நகர செயலாளர் ராஜா, மாணவரணி அகஸ்டின் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு நின்று, ஜெனரேட்டரை இயக்குமாறு கூறினர்.
இதயைடுத்து அங்கிருந்த மின்துறை அதிகாரிகள் சுமார் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு ஜெனரேட்டரை இயக்கினர். அதன்பிறகு மின்சாரம் வந்ததும், கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காரணம் என்ன?

இதற்கிடையில் மின்சாரம் இல்லாததால் வெப்பம் மற்றும் புழுக்கத்தால் அவதிப்பட்ட மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்றதை காணமுடிந்தது. 
திடீரென ஏற்பட்ட மின்நிறுத்தம் ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுப்பாளையத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் ஜம்பர் பழுதானதால் மின்தடை ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு முடிந்ததும் அந்தந்த பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்றார். 

மேலும் செய்திகள்