3 மணி நேரம் தொடர்ந்து இசை வாசித்த கலைஞர்கள்
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி 3 மணி நேரம் தொடர்ந்து கலைஞர்கள் இசை வாசித்தனர்;
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேள கிராமிய இசைக்கலைஞர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திருவிழா மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டிவீரன்பட்டியை சேர்ந்த இசை கலைஞர்கள் நேற்று அங்குள்ள முத்துலாபுரம் கருப்பணசாமி கோவிலில் கூடினர். அப்போது அவர்கள் 3 மணி நேரம் தொடர்ந்து இசை வாசித்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். வருமானம் இன்றி பல்வேறு சிரமங்களை சந்தித்தோம். கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு நிலைமை சரியானதால் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடந்தன.
நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்பினோம். தற்போது மீண்டும் ஊரடங்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்,
இசை கலைஞர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த இசை நிகழ்ச்சியை நடத்தியதாக வேதனையுடன் தெரிவித்தனர்.