பஸ்கள், வாகனங்கள் ஓடாததால் மக்கள் தவிப்பு
இரவுநேர ஊரடங்கால் பஸ்கள், வாகனங்கள் ஓடாததால் திண்டுக்கல்லில் மக்கள் தவித்தனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
இரவுநேர ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் கார்கள், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பகலில் அதிக அளவில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. உள்ளூர் மற்றும் வெளியூர்கள் என அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டனர். ஆனால், உள்ளூர் பஸ்கள் மட்டுமே நிரம்பின.
சென்னை, பெங்களூரு, கோவை உள்பட வெளியூர் பஸ்களில் மிகவும் குறைந்த அளவிலான மக்களே பயணம் செய்தனர்.
அதிலும் வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மட்டுமே பயணம் செய்தனர். பெரும்பாலான பஸ்கள் காலியாக சென்றன. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
போக்குவரத்து நிறுத்தம்
இதற்கிடையே இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள், வாடகை வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் பஸ்களை பொறுத்தவரை இரவு 10 மணிக்குள் குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதால் முன்னதாகவே சேவை நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர், போடிக்கு இரவு 7.30 மணிக்கும், திருச்சி, தேனிக்கு இரவு 8 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.30 மணிக்கும், நத்தம், பழனி, வத்தலக்குண்டு ஆகிய ஊர்களுக்கு இரவு 9 மணிக்கும் கடைசிநேர பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் இரவு 9 மணிக்கு மேல் மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல விரும்பிய பொதுமக்கள், வணிகர்கள் பஸ் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
இதேபோல் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இரவு 10 மணிக்குள் திரும்பி வர வேண்டும் என்பதால், நீண்டதூர கிராமங்களுக்கும் பஸ்கள் இரவில் இயக்கப்படவில்லை. இது கிராமப்புற மக்களை சிரமப்பட வைத்தது.
ரெயில் நிலையம்
இதற்கிடையே இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாத நிலையில், ரெயில்கள் இயக்கப்பட்டன. எனவே, ரெயில்களில் செல்வதற்கு மக்கள் அதிகஆர்வம் காட்டினர். இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலையில் இருந்தே பயணிகள் டிக்கெட் எடுக்க படையெடுத்தனர்.
ஆனால், இரவு 10 மணிக்கு மேல் வாடகை வாகனங்கள் இயக்கப்படாததால் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். ஒருசில பயணிகள் நள்ளிரவு ரெயிலுக்காக இரவு 10 மணிக்கே சென்று ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அதேபோல் வெளியூர்களில் இருந்து ரெயில்களில் இரவு 10 மணிக்கு மேல் திண்டுக்கல்லுக்கு வந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பஸ் மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
கடைகள் அடைப்பு
இதற்கிடையே வணிக நிறுவனங்கள், மொத்த பலசரக்கு கடைகள் நிறைந்த திண்டுக்கல்லில் இரவு 10.30 மணி வரை வியாபாரம் களைகட்டும். ஆனால், இரவுநேர ஊரடங்கால் ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள் உள்பட அனைத்து வியாபார கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், மொத்த விற்பனை கடைகளில் இரவு நேரத்தில் தான் அதிகவிற்பனை நடைபெறுவது வழக்கம். எனினும், ஊரடங்கு காரணமாக கடைகளை அடைக்கும்படி சுகாதாரத்துறையினர், போலீசார் கடைக்காரர்களிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. ஏற்கனவே வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், கடைகளும் அடைக்கப்பட்டதால் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.