பயணிகள் வருகை குறைந்ததால் தர்மபுரி ரெயில் நிலையம் வெறிச்சோடியது

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் தர்மபுரி ரெயில் நிலையம் வெறிச்சோடியது.;

Update:2021-04-20 22:35 IST
தர்மபுரி:
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் தர்மபுரி ரெயில் நிலையம் வெறிச்சோடியது.
ரெயில்கள் இயக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. சேலம்-பெங்களூரு மார்க்கத்தில் தர்மபுரி வழியாக தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயங்கி வருகின்றன. வழக்கமான நாட்களில் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை பயணிகள் வந்து செல்வார்கள்.
வெறிச்சோடின
தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ரெயில் நிலையத்துக்கு பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக ரெயில் நிலையம், பிளாட்பாரங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதேபோல் டிக்கெட் கவுன்ட்டர், முன்பதிவு மையம் ஆகியவற்றிற்கும் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ரெயில் பயணத்தை தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்