சிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது
சிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவகிரி வனச்சரகம் தேவியாறு பீட் பகுதியில் மஞ்சக் கேணி அருவி உள்ளது. இந்த வனப்பகுதியிலும், அருவிப்பகுதிக்கும் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிவகிரி வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் ராஜூ, திருவேட்டை, அருண்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24), செந்தூர்பாண்டியன் (26) ஆகியோர் அனுமதியின்றி வனப்பகுதியில் நுழைந்து அருவியில் குளித்து விட்டு, இப்பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து சிவகிரி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்பேரில் 2 பேருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.