நடிகர் யோகிபாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நடிகர் யோகிபாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2021-04-16 19:47 GMT
வாடிப்பட்டி,ஏப்
நடிகர் யோகிபாபு நடித்து வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தில், மருத்துவர் சமூகத்தைச் சார்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சலூன் கடைகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மாநில பிரதிநிதிகள் முத்துக்கருப்பன், பாண்டிக்கண்ணன் தலைமை தாங்கினர். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் குலகன், புறநகர் மாவட்டச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். இதில் மேலூர் நகர தலைவர் செந்தில், மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி முருகன், புதூர் ஜெய் ஆனந்த், காஞ்சரம்பேட்டை தலைவர் நிதிமாறன், மேலூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் புறநகர் மாவட்ட பொருளாளர் பாக்கியம் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது சம்பந்தமாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாண்டி வரவேற்றார். வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் திருப்பதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். 
இதில் ஞானவேல், ராஜா, ஜெயபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பிரதிநிதி அலங்காநல்லூர் முத்து ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கக் கோரி தாசில்தார் பழனிக்குமாரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்