மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி கைது

களியக்காவிளை அருகே மதுகுடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-16 18:57 GMT
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே மதுகுடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி மனைவி
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மீனச்சல் மன்னாவிளையை சேர்ந்தவர் வில்சன். இவருடைய மகள் மீனா (வயது 34). இவருக்கும், பாறசாலை ஆயிரா சூரக்குழியை சேர்ந்த ஷாஜி (42) என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷாரோன், ஷான் என 2 மகன்கள் உள்ளனர். ஷாரோன் 10-ம் வகுப்பும், ஷான் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 
மரம் வெட்டும் தொழிலாளியான ஷாஜிக்கு மது பழக்கமும், கஞ்சா பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.
கடன் வாங்கினார்
மதுகுடித்து விட்டு வரும் ஷாஜி, மீனாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. எல்லை மீறும் போது இவர்களுடைய பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றது.
அப்போது போலீசார் ஷாஜியை கண்டித்து, ஒழுங்காக குடும்பம் நடத்துகிற வழியை பார் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். மீனாவும் சமாதானம் அடைந்து, குழந்தைகளுக்காக ஷாஜியிடம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மீனா தனது வீட்டை சீரமைக்க வங்கியில் கடன் வாங்கி பணத்தை வீட்டில் வைத்திருந்தார். 
வெட்டிக்கொலை
இதனை அறிந்த ஷாஜி அன்றைய தினம் இரவு மதுகுடிக்க பணம் கேட்டு மீனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வழக்கமாக நடக்கும் தகராறு தானே என மகன்களும் தூங்க சென்று விட்டனர். 
பின்னர் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் வலுத்தது. அந்த சமயத்தில், வீட்டை சீரமைப்பதற்காக வாங்கிய பணத்தை மது குடிக்க தரமாட்டேன் என மீனா பிடிவாதமாக இருந்துள்ளார். 
பணம் தர மறுத்த மனைவி மீது அவர் ஆத்திரம் அடைந்தார். ஒரு கட்டத்தில் வெட்டு கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த மீனா, அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
 போலீசில் சரண்
பின்னர் ஷாஜி, தூங்கிக்கொண்டிருந்த மகன்களை எழுப்பி, உங்கள் அம்மாவை வெட்டிக்கொலை செய்து விட்டேன். நான் போலீசில் சரணடைய போகிறேன் என்று கூறி விட்டு பாறசாலை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். 
இதற்கிடையே மீனாவின் உடலை பார்த்து மகன்கள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தாயின் உடலை பார்த்து மகன்கள் கதறி அழுத காட்சி, அங்கு திரண்டிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது.
பரபரப்பு
பிறகு போலீசார் மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜியை கைது செய்தனர்.
மது குடிக்க பணம் தராததால் மனைவியை தொழிலாளி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்