கடலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Update: 2021-04-16 17:11 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இதனால் வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒரே தெருக்களில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையிலும், வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்வதை தடுக்கும் வகையிலும் கட்டுப்பாட்டு பகுதியில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

 அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகள்?

அதாவது அண்ணாகிராமம் அடுத்த பி.என்.பாளையம் ரெயில் நிலைய தெரு, திருப்பாதிரிப்புலியூர் மூன் சேடவ் சேம்பர் வீதி, குறிஞ்சிப்பாடி காந்தி நகர் பெரியசாமி தெரு, காட்டுமன்னார்கோவில் வளையகார தெரு, சிதம்பரம் வாகீசன் நகர் 3-வது குறுக்கு தெரு, நெய்வேலி வட்டம் 8 மெழுகுவர்த்தி தெரு, வட்டம் 13 அளவுகோல் தெரு, வட்டம் 15-ல் உள்ள 3ஜி டைப்-1 ஆகிய இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாகும். இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் 18 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளது.

மேலும் செய்திகள்