திருப்பூரில் 2-வது திட்ட பிரதான குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
திருப்பூரில் 2வது திட்டபிரதான குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு;
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 2-வது திட்டத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே பாலத்தின் மேல்பகுதியில் உள்ள 2-வது திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவு வெளியேறி வீணாகியது. உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் வினியோக பணிகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.
பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தென்னம்பாளையம், பெரிச்சிப்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சியின் தெற்கு பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நேற்று காலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வந்து, குழாய் உடைப்பை ஆய்வு செய்தனர். பின்னர் ஊழியர்களை கொண்டு குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரு குழாய்கள் இணையும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்றது. சீரமைப்பு பணிகள் முடிந்ததும் இரவில் குடிநீர் சப்ளை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.