கணவன்-மாமியாருக்கு சிறை தண்டனை

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-04-16 16:28 GMT
மதுரை,ஏப்
வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
வரதட்சணை கொடுமை
திருவாதவூரை சேர்ந்தவர் சேது. இவரது மகன் அருண்குமார் (வயது 38). இவருக்கும், லதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகளை லதா வீட்டினர் வழங்கினர். இந்த நிைலயில் தொழில் தொடங்குவதற்காக ரூ.1 லட்சத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு லதாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.
தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான லதா, கடந்த 2007-ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லதாவின் சாவுக்கு காரணமாக இருந்ததாக அருண்குமார், அவரது தாயார் காந்திமதி, தந்தை சேது, சகோதரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
2 பேருக்கு சிறை தண்டனை
இந்த வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தங்கம் ஆஜரானார். வழக்கு நிலுவையில் இருந்தபோது, அருண்குமாரின் தந்தை சேது மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததால், குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், அவரது தாயார் காந்திமதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். அருண்குமாரின் சகோதரி விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்