மேட்டுப்பாளையம்
சிறுமுகை வனச்சரகத்தில் உட்பட்ட பெத்திகுட்டை காப்புக்காட்டில் இருந்து நேற்று முன்தினம் 2 ஆண் யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து செல்வதை சிறுமுகை வனத்துறையினர் கண்டறிந்து அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஆஞ்சநேயர் கோவில் கரடு பகுதிக்கு சென்று மறைந்தது.
இரவு நேரம் இருட்டத் தொடங்கியதால் காட்டுயானைகள் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் தேடும் பணியை கைவிட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு செலுத்திவந்தனர்.
விரட்டும் முயற்சி
இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. நேற்று காலை வனத்துறையினர் மீண்டும் காட்டு யானைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் (சிறுமுகையில் இருந்து 9 கி.மீ தொலைவில்) இருக்கும் பொம்மளப்பாளையம் என்ற கிராமத்தில் இரண்டு யானைகளும் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் வனச்சரக அலுவலர்கள் செந்தில்குமார் (சிறுமுகை) பழனி ராஜா (மேட்டுப்பாளையம்) செல்வராஜ் பெரியநாயக்கன்பாளையம்) மற்றும் வனச்சரகங்களுக்குட்பட்ட வனவர்கள்வனக் காப்பாளர்கள் வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
வனத்துறையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அட்டகாசம்
வழித்தவறி வந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும்போது அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூர் வடக்கு தோட்டம் கருப்புசாமி என்பவர் தோட்டத்துக்குள் புகுந்து தோட்டத்தில் இருந்த மாட்டை காட்டு யானை தாக்கி அட்டகாசம் செய்தன.
இதில் மாடு படுகாயம் அடைந்தது. உடனே இது குறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் விரட்டியதில் தோட்டத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகளை சாலைப்புதூர், ஒட்டக மண்டலம், ஆஞ்சநேயர் கரடு ஆத்திகுட்டை, வாக்கனாங்கொம்பு, திம்மனூர் வழியாக ஒரு யானை பிரிந்து தேன்கல்கரடு அடிவாரத்தை அடைந்தது மற்றொரு யானை சிறுமுகை அருகே உள்ள பகத்தூர் கிராமத்திற்கு சென்று அட்டகாசம் செய்தன.
வனத்துறையினர் மீண்டும் அந்த யானைகளை விரட்டியதில் பிற்பகல் 3 மணிக்கு சிறுமுகை அருகே உள்ள ஏழெருமை பள்ளம் வழியாக விஸ்கோஸ் தொழிற்சாலைக்குள் அடர்ந்த கருவேல மரங்களுக்கு இடையே சென்று மறைந்தன.
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் தேர்தல் கரடு அடிவாரப்பகுதியில் இருந்த யானைகளை விரட்டினர்.
2 பேர் படுகாயம்
இந்த நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் போது ஒரு யானை வனப்பகுதியை நோக்கி செல்லும்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிட்டேபாளையம் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனி (வயது 80), மற்றும் வெள்ளிக் குப்பம்பாளையம் மணியக்காரவீதியைச் சேர்ந்த பழனியம்மாள் ( 60) ஆகிய 2 பேரை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் வனத்துறையினர் மற்றும் அக்கம், பக்கம் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
----