போலீஸ் நிலையங்களில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீஸ் நிலையங்களில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்தார்.;

Update: 2021-04-16 14:57 GMT
தேனி: 


ரூ.13¼ லட்சம் அபராதம்
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அனைத்து போலீஸ் நிலையங்கள் சார்பிலும் பொதுமக்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

முக கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாத 6 ஆயிரத்து 630 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

அவர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூ.13 லட்சத்து 26 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 

அதுபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத 194 பேரிடம் இருந்து ரூ.92 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறை
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். 

பொது இடங்களில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டமாக கூடி இருந்தாலோ, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அதற்குரிய விதிகளை பின்பற்றாமல் இருந்தாலோ, கொரோனா தடுப்பு விதிகளை மீறினாலோ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம்.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 04546-261730 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

 கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருங்கிணைப்பு அலுவலர்கள்
மாவட்டத்தில் 31 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அன்றாட கொரோனா பாதிப்பு,  மருத்துவ பரிசோதனை, கட்டுப்பாட்டு பகுதிகள் போன்ற விவரங்களையும், அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், கட்டுப்பாட்டு மையத்துக்கும் உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார்கள்.


இத்தகவலை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்