அண்ணன் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது

அண்ணன் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது

Update: 2021-04-16 14:46 GMT
சரவணம்பட்டி

சரவணம்பட்டியில், அண்ணன் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

வாக்குவாதம்

கோவை சரவணம்பட்டி லட்சுமி நகர் அம்மன் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சிந்து (வயது30). கோவையை அடுத்த அன் னூர் பசூரில் சக்திவேலின் தம்பி குமரவேல் (32) வசித்து வருகிறார். 

அவர், குடிபோதையில் சக்திவேலின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார். அவர், தனது தந்தையின் பெயரில் உள்ள கியாஸ் சிலிண்டரை கேட்டு வாக்குவாதம் செய்தார். அவரை சக்திவேல் கண்டித்துள்ளார்.

இதனால் குமரவேல் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால் அவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லை. 

இதன் காரணமாக அவர், சக்திவேலின் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்துள்ளார். இதை பார்த்த சக்திவேலின் மனைவி சிந்து குமரவேலுவிடம் எதற்கு பெட்ரோல் பிடிக்கிறாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். 

பெட்ரோல்  ஊற்றி தீவைப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த குமரவேல், தன் கையில் இருந்த பெட்ரோலை சிந்து முகத்தில் தெளித்து தீ வைத்துள்ளார். இதில் சிந்துவிற்கு முகம் மற்றும் தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்டது.  

இதனால் அலறித்துடித்த சிந்துவை சக்திவேல் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேலுவை கைது செய்தனர். 

கடந்த 2019-ம் ஆண்டு சொத்துப் பிரச்சினை காரணமாக தனது தந்தையை தாக்கி கொலை செய்த வழக்கில் சிறை சென்ற குமரவேல் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்