திண்டுக்கல்லில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்கு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
அதன்படி திண்டுக்கல் காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம், மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர்நல அலுவலர் லட்சியவர்ணா முன்னிலை வகித்தார். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட காய்கறி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டனர்.
இதுதவிர அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வந்து தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் மொத்தம் 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் முருகையா, ரெங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.