திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
புராதன இடங்கள்
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் இருக்கும் புராதன இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அவற்றை அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி வரை மூடும்படி மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புராதன இடங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
திண்டுக்கல் மலைக்கோட்டை
திண்டுக்கல்லின் அடையாளமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். மேலும் சினிமா படப்பிடிப்புகளும் அவ்வப்போது நடக்கிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலால் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி மலைக்கோட்டை நுழைவுவாயில் பூட்டப்பட்டது. மேலும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் நேற்று மலைக்கோட்டையை சுற்றிபார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.