புதுச்சேரி கடலோர பகுதிகளில் வெட்டி அழிக்கப்படும் மாங்குரோவ் காடுகள்
புதுவையில் கடலோர கழிமுக பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வெட்டி அழிக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
மாங்குரோவ் காடுகள்
புதுவை கடலோர கழிமுக பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கடல் அரிப்பை தடுப்பதற்காக இந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுனாமி காலத்தில் புதுவை நகரப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படாமல் இந்த மரங்கள் தடுத்தது என்றால் அது மிகையாகாது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மாங்குரோவ் காடுகளுக்கு தற்போது சோதனை ஏற்பட்டுள்ளது. சிலர் அங்குள்ள மரங்களை வெட்டி படகுகளில் எடுத்து செல்கின்றனர்.
வெட்டி கடத்தல்
பின்னர் அந்த மரக்கிளைகளை கல்லைக்கட்டி கடலுக்குள் ஆழ்த்துகின்றனர். அப்போது இயற்கையாகவே கடலுக்குள் மரம் இருப்பதுபோன்ற நிலை உருவாவதால், மீன்கள் அதை சுற்றி வருகின்றன. அந்த நேரத்தில் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் எளிதாக மீன்களை பிடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.
மீன்களை எளிமையாக பிடிக்க இந்த முறை கையாளப்படுவதாக இருந்தாலும், இயற்கை தந்த பாதுகாப்பு அரணை வெட்டி வீழ்த்துவது என்பது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கடலோர பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டுவதை தடுக்கவேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது.