பொன்னேரி அருகே கடைக்காரருக்கு வெட்டு; மதுக்கடை பாரை சூறையாடிய பொதுமக்கள்
பொன்னேரி அருகே கடைக்காரரை கத்தியால் வெட்டியது தொடர்பாக மதுக்கடை பாரை பொதுமக்கள் சூறையாடினர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மெதூர் கிராமத்தில் அரசு மதுக்கடை செயல்படுகிறது. இதன் அருகில் பார் ஒன்றை தனியார் ஒருவர் நடத்தி வருகிறார்.
இதன் எதிரே சிறிய பெட்டிக்கடையை மெதூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (35) என்பவர் நடத்தி வருகிறார். இவர் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பதாக தெரிகிறது.
இதனால் மதுக்கடைக்கு வரக்கூடியவர்களில் ஏராளமானோர் பெட்டி கடைக்கு செல்வதால் மதுக்கடை பாரில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி பார் ஊழியர்கள் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவரை கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த பெட்டி கடைக்காரரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் மெதூர் கிராம மக்களுக்கு தெரியவரவே அவர்கள் மதுக்கடை பாருக்கு சென்று அங்கு இருந்த மேசை, நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிகிறது.
அப்போது பாரில் மது குடித்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பெட்டி கடைக்காரரை கத்தியால் வெட்டிய பார் ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.