கொடுமுடி, அந்தியூர், நம்பியூர் பகுதியில் நள்ளிரவு கொட்டித்தீர்த்த மழை

கொடுமுடி, அந்தியூர், நம்பியூர் பகுதியில் நள்ளிரவு மழை கொட்டித்தீர்த்தது.

Update: 2021-04-15 22:57 GMT
அந்தியூர்
கொடுமுடி, அந்தியூர், நம்பியூர் பகுதியில் நள்ளிரவு மழை கொட்டித்தீர்த்தது. 
கொடுமுடி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கிறது. இதனால் காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவதே குறைந்து காணப்பட்டது. நுங்கு, இளநீர், பழச்சாறு, குளிர்பான கடைகளில் கூட்டம் மொய்த்தது. 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மாலையில் கருமேகங்கள் சூழ்கின்றன. நள்ளிரவில் மழை பெய்கிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த தட்பவெட்ப நிலை நிலவுகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுமுடி, சாலைப்புதூர், க.ஒத்தக்கடை, தாமரைப்பாைளயம், ஊஞ்சலூர், வெங்கம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தூறியது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1.30 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.
ஒத்தக்கடை, கணபதிபாளையம், பெரிய வட்டம், ஆவுடையார்பாறை, சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன் பாளையம், வெங்கம்பூர், சாலைப்புதூர், தாமரைப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சில இடங்களில் கரும்பு, வாழைகள் சாய்ந்தன.  
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதி, அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் சக்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.
கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது. 
33.3 அடி உயரம் கொண்ட வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது 20.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான தாமரைக்கரை, தாளக்கரை, கொங்காடை ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
நம்பியூர்
நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான குருமந்தூர், கூடக்கரை, மலையப்பாளையம், வேமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பம் வீசியது. இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 11 மணி வரை சுமார் 4 மணி நேரம் மழை நிற்காமல் பெய்தது. 
குண்டோிப்பள்ளம் அணை
 டி.என்.பாளையம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், மல்லியம்மன் துர்க்கம் (கிழக்கு) ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரே அணையின் நீராதாரம் ஆகும். அணையின் நீர்மட்டம் 42 அடியாகும். அணை தண்ணீரின் மூலம் 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தே தாகம் தணித்து செல்கின்றன. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று காலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 6 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 29 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. 
பவானிசாகர் 
பவானிசாகர் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பம் வீசியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வெப்பம் மாலை 5.30 மணி வரை வீசியது. அதன்பின்னர்் இரவு 8 மணிக்கு மேல் பலத்த காற்று வீச தொடங்கியது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. பிறகு மழை பெய்தது. அதிகாலை வரை நிற்காமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

மேலும் செய்திகள்