ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா- சத்தியமங்கலத்தை சேர்ந்த முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், சத்தியமங்கலத்தை சேர்ந்த முதியவர் கொரோனாவுக்கு பலியானார்.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், சத்தியமங்கலத்தை சேர்ந்த முதியவர் கொரோனாவுக்கு பலியானார்.
144 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தொற்று அதிகமாக இருந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 153 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்றும் ஒரே நாளில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 437 ஆக உயர்ந்தது. இதில் 15 ஆயிரத்து 465 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 30 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
முதியவர் பலி
புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 100-ஐ தாண்டுவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 820 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிக பாதிப்பு இல்லாதவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். சத்தியமங்கலம் அருகே கோணமூலை பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 13-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 152 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.