ஈரோடு மாவட்டத்தில், 19-ந்தேதி தொடங்குகிறது: பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்குகிறது.
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 24-ந்திக்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 படிக்கும் 44 ஆயிரத்து 641 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வினை எழுத உள்ளனர்.
இதில் இயற்பியல், வேதியியல் செய்முறை தேர்வினை தலா 11 ஆயிரத்து 752 பேரும், உயிரியல் செய்முறை தேர்வினை 7 ஆயிரத்து 252 பேரும், தாவரவியல், விலங்கியல் செய்முறை தேர்வினை 559 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வினை 4 ஆயிரத்து 688 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 6 ஆயிரத்து 850 பேரும், புள்ளியியல் தேர்வினை 745 பேரும், மெக்கானிக்கல் சயின்ஸ் 135 பேரும், வேளாண்மை செய்முறை தேர்வினை 91 பேரும், நர்சிங் 167 பேரும், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வினை 226 பேரும் எழுத உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத்தேர்வு தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள். வருகிற 24-ந்தேதி செய்முறை தேர்வு நிறைவடைகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறை தேர்வு நடத்தப்படும். ஒரே நாளில் வெவ்வேறு பாட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு தனித்தனி ஆய்வகங்களில் நடக்கும். ஒரு பேட்ச் (குழு) மாணவர்கள் ஒரு நாளில் ஒரே ஒரு பாட செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள். அதிகபட்சமாக இட வசதியை பொறுத்து 20 முதல் 25 வரை மாணவர்கள் ஒவ்வொரு பேட்ச்சாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு பேட்ச் செய்முறை தேர்வு முடிந்ததும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வேதியியல் ஆய்வகத்தில் மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட மாட்டாது. அங்கு ராசாயணங்கள் அதிகளவில் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதற்காக அங்கு மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட மாட்டாது.
மேலும் வேதியியல் லேப்பில் மாணவர்கள் வாய் வைத்து உறிஞ்சும் பிப்பெட் கருவியை பயன்படுத்தவும், பயலாஜி லேப்பில் மைக்ரோ ஸ்கோப் கருவியை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.