ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை

ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-04-15 22:55 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
110 டிகிரி வெயில்
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இரவு நேரங்களிலும் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் காத்து நிற்கும்போது பெரிதும் அவதி அடைந்தனர்.
இடி-மின்னலுடன் மழை
கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் புறநகர் பகுதியில் வெப்பம் தணிந்து காணப்பட்டது. ஆனால் காலை நேரங்களில் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலையும் வழக்கம்போல் வெயில் அடித்தது.
மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிமுதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று கன மழையாக கொட்டி தீர்த்தது. அதிகாலை 4 மணி வரை இந்த மழை நீடித்தது.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கியது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் முன்பு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் ரோட்டில் ஓடியது.
ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஏற்பட்ட சாக்கடை கால்வாய் அடைப்பை மாநகராட்சி பணியாளர்கள் வாகனம் மூலம் சரி செய்தனர். வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 
இரவில் மழை
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் விட்டுவிட்டு மழை கொட்டியது. அதன்பிறகும் சாரல் அடித்து கொண்டே இருந்தது. இதனால் ஈரோடு பஸ் நிலையம், சம்பத்நகர், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் அவதி அடைந்தனர்.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் - 104.6
கொடுமுடி- 100.6
பவானி - 89
நம்பியூர் - 85
சென்னிமலை - 76
ஈரோடு - 70
தாளவாடி - 60
பெருந்துறை - 55
கவுந்தப்பாடி - 52.2
அம்மாபேட்டை- 48
மொடக்குறிச்சி - 45
குண்டேரிபள்ளம்- 40
எலந்தகுட்டைமேடு - 29.4
பவானிசாகர் - 28.2
சத்தியமங்கலம் - 18
கோபி - 16
கொடிவேரி- 12.2. 
மாவட்டம் முழுவதும் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 104.6 மில்லி மீட்டர் மழை அளவும், குறைந்தபட்சமாக கொடிவேரி பகுதியில் 12.2 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்