தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு
தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா
பல்லடம்
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்லடம் சுற்றுவட்டாரப்பகுதிகளில், ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக, லாரிகள், வேன்களில் கொண்டுவரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் பலர் கேன்கள் மற்றும் பாக்கெட்டுகளில், விற்பனையாகும் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் தரச்சான்று மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்லடம் பகுதியில் ஒரு சில குடிநீர் கம்பெனிகள் முன்தேதியிட்டு கேன்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பஸ் நிலையம், கடைவீதி, போன்ற இடங்களில், சிறிய கடைகளில் விற்கப்படும், குடிநீர் பாக்கெட்டுகள், தரமற்றதாகவும், பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தரமில்லாத குடிநீர் விற்பனையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.