சேலம் மாநகராட்சி பகுதியில் 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
சேலம் மாநகராட்சி பகுதியில் 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை மையங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவால் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மணியனூர் அரசு சட்டக்கல்லூரியில் 110 படுக்கை வசதிகளுடனும், கோரிமேடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடனும் கொரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் தற்போது 70 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 598 பேர் மருத்துவமனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,980 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
500 படுக்கை வசதிகளுடன்...
இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி மாநகர பகுதிகளில் கூடுதலாக 500 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை தற்காலிகமாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளுதல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரனங்களையும் பொருத்தும் பணிகள் கடந்த 3 நாட்களில் நிறைவடையும் என ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வாய்க்கால் பட்டறை அரசு உயர்நிலைப் பள்ளி, கோட்டை திருமண மண்டபம், பழைய சூரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, மாமாங்கம் கொங்கு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு மகளிர் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிமாக அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் ராம்மோகன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிபொறியாளர்கள் அன்புசெல்வி, மலர், சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், மாணிக்கவாசகம் மற்றும் சுகாதார ஆய்வளார்கள் பிரகாஷ், சித்தேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.