கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.11 லட்சம் அபராதம்
நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத நபர்களுக்கும், சமூக இடைவெளி மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று காலை சரலூர் மீன் சந்தை, பீச் ரோடு, செட்டிகுளம், ஆனைபாலம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட கடைகள் மற்றும் முககவசம் அணியாமல் சென்ற தனி நபர்களுக்கு சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.4,400 அபராதம் விதித்தனர்.
ரூ.11 லட்சம் அபராதம்
இதேபோல் நகரின் மற்ற பகுதிகளிலும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை, ராஜேஷ், ஜான் உள்ளிட்டோரும் அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நேற்று ஒரே நாளில் ரூ.15 ஆயிரம் வரை அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்காதவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் இதுவரை ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால் தெரிவித்தார்.
போலீசாரும் நடவடிக்கை
இதேபோல் போலீசாரும் முக கவசம் அணியாத தனி நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,016 பேருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நாகர்கோவில் சப்-டிவிஷனில் 289 பேர் மீதும், தக்கலை சப்-டிவிஷனில் 280 பேர் மீதும், குளச்சலில் 268 பேர், கன்னியாகுமரியில் 175 பேர், மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 4 பேர் என ஒரே நாளில் மொத்தம் 1,016 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற 3 ஆயிரத்து 164 பேர் மீதும் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.