திருமூர்த்தி அணைப்பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-04-15 21:12 GMT
தளி
திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர் இருப்பு சரிந்தது
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை ஒட்டி அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 3-ம் சுற்றுக்கு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு சரிந்து வருகிறது. 
அணைப்பகுதியில் மழை
ஆனால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளின் தயவால் திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாய் மூலமாக தொடர்ந்து நீர்வரத்தை பெற்று வருகிறது. இதனால் அணையில் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளதால் குறிப்பிட்ட இடைவெளியில் சீரான முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 
இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென திருமூர்த்தி அணைப்பகுதியில் மழை பெய்தது. அதன்படி அணைப்பகுதியில் 54 மில்லிமீட்டரும், நல்லாறு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி அணையில் 29.59 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு பாலாறு மற்றும் காண்டூர் கால்வாய் மூலமாக வினாடிக்கு 901 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 974 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதியான கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி, தாந்தோணி, மடத்துக்குளம், காரத்தொழுவு, துங்காவி, போன்ற பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக, கடந்த 3 நாட்களாக, தொடர் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. 
கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவது இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தாலும், கொரோனா 2-ம் அலை வீசும் நிலையில், தற்போது இந்த தொடர் கனமழை மடத்துக்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்கள் வேகமாக பரவி விடுமோ? என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்