கூடுதல் வட்டி தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்த ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
கூடுதல் வட்டி தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்த ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 லட்சம் அபராதமும் விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;
கோவை
கூடுதல் வட்டி தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்த ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 லட்சம் அபராதமும் விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கவர்ச்சிகரமான திட்டங்கள்
திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் தங்கமநகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 49). இவர், சபரி ஆண்டவர் ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார்.
அவர், தனது ஈமு கோழி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஈமு பண்ணை அமைத்து கொடுப்பதுடன், மாதம் ரூ.8 ஆயிரம், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் வி.ஐ.பி. திட்டத்தில் ரூ1½ லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழிப் பண்ணை அமைத்துக் கொடுத்து மாதம் ரூ.12 ஆயிரம், ஆண்டு போனஸ் ரூ.20 ஆயிரம் வழங்குவதுடன், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்த பணம் முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும் என்பது உள்பட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்.
ஈமு கோழி மோசடி
அதை நம்பி திருப்பூர் மாவட்டம் மூகாம்பிகை நகரை சேர்ந்த சக்திவேல் (41) என்பவர் உள்பட 11 பேர் ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து 800 முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டு பணத்தையும், வட்டியையும் ஈஸ்வர மூர்த்தி ஏற்கனவே அறிவித்தபடி திரும்ப வழங்கவில்லை.
இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஈஸ்வரமூர்த்தி மீது மோசடி மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வரமூர்த்தி 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார்.
நேற்று தீர்ப்பு கூறப்படும் போது ஈஸ்வரமூர்த்தி கோர்ட்டில் ஆஜராக வில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தும், கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதி ரவி மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.