வடக்கன்குளம் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

வடக்கன்குளம் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-15 19:16 GMT
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரி சிறைபிடிப்பு

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பழவூர் அருகே கீழ்குளம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அப்பகுதியில் சுத்தம் செய்து, அங்கிருந்த மணலை அகற்றி லாரியில் ஏற்றி செல்லும் பணி நடந்தது.

இதற்கிடையே அங்கு கல்குவாரி அமைப்பதால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மணல் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அரசின் அனுமதி பெற்ற பின்னரே கல்குவாரி அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்