ரூ.3 கோடி வாடகை பாக்கி: திருச்சியில் சினிமா தியேட்டருக்கு ‘சீல்’ வைப்பு; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
திருச்சியில் ரூ.3 கோடி வாடகை பாக்கி வைத்திருந்ததால் சினிமா தியேட்டருக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
திருச்சி,
திருச்சியில் ரூ.3 கோடி வாடகை பாக்கி வைத்திருந்ததால் சினிமா தியேட்டருக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ரூ.3 கோடி வாடகை பாக்கி
திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் முருகன் தியேட்டர் இயங்கி வந்தது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சினிமா தியேட்டரில் திரைப்படங்கள் தினமும் 3 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தியேட்டர் நிர்வாகத்தினர் மாநகராட்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக வாடகையை முழுமையாக செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர். வாடகை பாக்கி மட்டும் ரூ.3 கோடியே 7 லட்சத்து 5 ஆயிரத்து 411 ஆகும்.
சினிமா தியேட்டருக்கு ‘சீல்’
இந்த தொகையை வசூல் செய்வதற்காக மாநகராட்சி சார்பில் தியேட்டர் நிர்வாகத்தினருக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தியேட்டர் நிர்வாகத்தினர் பணம் கட்டவில்லை. இதனால், நேற்று காலை திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அரியமங்கலம் கோட்ட உதவி வருவாய் அதிகாரி சிவசங்கரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் ஞான பாண்டி ஆகியோர் அந்த சினிமா தியேட்டருக்கு சென்று அதன் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி விட்டு அதன் மெயின் கேட்டில் பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்குவாதம்
இதற்கிடையில் அந்த தியேட்டரை தற்போது குத்தகை அடிப்படையில் நடத்திவரும் அ.தி.மு.க. பகுதி செயலாளர் அன்பழகன் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது “மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு 2 நோட்டீஸ்களை அனுப்பியது. அதில் ஒரு நோட்டீசில் சுமார் ரூ.1 கோடி வாடகை பாக்கி என்றும், இன்னொரு நோட்டீசில் ரூ.3 கோடியே 7 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் பேசி பணத்தை கட்டலாம் என முடிவு செய்து இந்த நேரத்தில்தான் ‘சீல்’ வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு கால அவகாசம் தரவில்லை. உள்ளே இருக்கும் ஆவணங்கள் எடுப்பதற்கு திறந்துவிட வேண்டும் என்று கூறினார். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தது, வைத்ததுதான் திறக்க மாட்டோம் என்று கூறி சென்றுவிட்டனர்.
அதிகாரிகள் விளக்கம்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “குறிப்பிட்ட அந்த தியேட்டர் நிர்வாகம் கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை. வாடகை நிலுவைத்தொகை, அதற்கு உரிய அபராதத்தொகை, ஜி.எஸ்.டி. வரி என்று மொத்த தொகை ரூ.3 கோடியே 7 லட்சமானது. அதற்கு தான் நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். பணம் கட்டாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
திருச்சி மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத நிறுவனங்களின் மீது மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சிந்தாமணி கூட்டுறவு அங்காடி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.3 கோடி வாடகை பாக்கி வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.