கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
திருச்சியில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.;
மலைக்கோட்டை,
கொரோனா தொற்று 2-வது அலை தற்போது அதி வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், திருச்சி மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், திருச்சி சத்திரம் பஸ்நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த ஆட்டோ டிரைவர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
அத்துடன் கொரோனா நோய் தொற்று பற்றியும், அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் முக கவசமின்றி சுற்றித்திரிந்த 1,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் 67 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.33 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.