பீடி வாங்கி தர மறுத்த வாலிபரை கத்திக்குத்திய 2 பேர் கைது
பீடி வாங்கி தர மறுத்த வாலிபரை கத்திக்குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மலைக்கோட்டை,
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் (வயது 19). இவர் கோட்டை ரெயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்த துரை (22), சூர்யா ஆகியோர் அபுதாகாரை பீடி வாங்கி வரும் படி கூறி உள்ளனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதுரைரோடு பகுதியில் வள்ளுவர்நகர் அருகில் அபுதாகீர் வேலை பார்க்கும் டிபன் கடைக்கு சென்ற துரையும், சூர்யாவும் சேர்ந்து அபுதாகீரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். அத்துடன் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபுதாகீரை குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து, துரை, சூர்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.