வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் கிருஷ்ணகிரியில் பீலா ராஜேஷ் பேட்டி
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்
கிருஷ்ணகிரி:
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரக்கூடிய அரசியல் கட்சியினர், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரியில் பீலா ராஜேஷ் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநில எல்லைகளில் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு அதில் வருபவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 230 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி
அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மையத்திற்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் கிருஷ்ணகிரி நகராட்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில் நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமணையில் 190 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் கொரோனா தடுப்பூசி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆக்சிஜன் டேங்க்
மேலும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 512 படுக்கைகளில் 450 படுக்கைகளுக்கு 24 மணிநேரமும் தங்குதடையின்றி நேரடியாக ஆக்சிஜன் செலுத்தும் வகையில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், திட்ட இயக்குனர் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.