பள்ளிபாளையம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
பள்ளிபாளையம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி;
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்களும், 10-ம் வகுப்பு படிக்கும் தரனீஷ் என்ற மகனும் இருந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் ஊர் கிணற்றின் அருகே தனது நண்பர்களுடன் தரனீஷ் விளையாடி கொண்டிருந்தார். பின்னர் நண்பர்களுடன் ஊரில் உள்ள 70 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
ஆனால் தனக்கு நீச்சல் தெரியாததால் மாணவர் தரனீஷ் கிணற்றின் மேல் இருந்த கம்பியில் கயிறு கட்டி உள்ளே இறங்கி கயிற்றை பிடித்து குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கயிற்றை விட்ட அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.
உடல் மீட்பு
இதை கேட்டு கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி சுமார் 1 மணி நேரம் போராடி, இறந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஊர் கிணற்றின் மீது தடுப்பு அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
=========