ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150 வீடுகள் இடிக்கப்பட்டன

திருப்பரங்குன்றம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-04-15 17:17 GMT
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 ஏக்கர் காலி இடம்
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் ஆசிரியை காலனி, மொட்டமலை, குறிஞ்சி நகர் பகுதிகளில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு காலி இடம் உள்ளது. இதன் மைய பகுதியில் ராட்சத மின் கோபுரங்கள் சார்ந்த நீண்ட மின் பாதை செல்கிறது. ஆகவே அந்த காலி இடத்தில் துணை மின் நிலையம் அமைக்கலாமா அல்லது மின் கோபுரங்கள் செல்லும் பாதையை தவிர்த்து, பொதுமக்கள் வசதிக்காக பெரிய அளவில் தினசரி காய்கறி சந்தை அமைக்கலாமா அல்லது தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்கலாமா என சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
அதிகாரிகள் பாராமுகம்
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள அய்யப்பன் கோவில் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடுகள் கட்டி குடியேறினார்கள். எனவே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அந்த வீடுகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருந்து விட்டனர். இதையடுத்து மீண்டும் அதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் குடிசைகள் போட்டு குடியேறினார்கள். இதனையும் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.
அறிவிப்பு பலகை
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தாலுகா அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்தால் உரியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகங்கள் கொண்ட அறிவிப்பு பலகையை மாநகராட்சி அதிகாரிகள் வைத்தனர். இதனிடையே கடந்த 25 நாட்களுக்கு முன்பு மொட்டமலையின் மைய பகுதியில் ஹாலோபிளாக் கற்களை கொண்டு அதிவேகமாக வீடுகள் கட்டப்பட்டன.
வீடுகள் அகற்றம்
இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று காலையில் திருப்பரங்குன்றம் தாசில்தார் மூர்த்தியின் நேரடி பார்வையில் புல்டோசரை கொண்டு முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட 50 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் பாதி கட்டப்பட்ட மற்றும் அடித்தளம் அமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தங்களுக்கு ஒரு சென்ட் இடம் கூட இல்லை. குடியிருப்பதற்கு சொந்தமாக வீடு இல்லை. அதிகாரிகள் வேண்டியவர், வேண்டாதவர்கள் என்று ஒரு சிலருக்கு சாதமாக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். ஆகவே கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு அழுது புலம்பினார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.
பாரபட்சம் காட்டவில்லை
இதுகுறித்து தாசில்தார் மூர்த்தியிடம் கேட்டபோது, யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை. மேலும் அங்கு ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை அள்ளி கொள்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை அள்ளி வெளியேற்றியதும் அனைத்து வீடுகளும் இடிக்கப்படும்.” என்றார். 
திடீரென்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. திருநகர் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்