கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்வு

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்ந்து கிலோ ரூ.65க்கு விற்பனையானது.;

Update: 2021-04-15 16:57 GMT
தேனி : 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. 

குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி சின்ன ஓவுலாபுரம், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

 இங்கு விளையும் திராட்சை பழங்கள் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திராட்சைப் பழம் கிலோ ரூ.10-க்கு விற்றது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை என்று திராட்சை பழங்களை விவசாயிகள் வெட்டி வீசினர்.

தற்போது கருப்பு பன்னீர் திராட்சை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து கிலோ ரூ.65-க்கு விற்பனையானது. 

வரத்து குறைவால் திராட்சை பழங்களை உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்கின்றனர். 

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்