தஞ்சை மாவட்ட பகுதிகளில் வயல்களில் நல்ஏர் பூட்டி வழிபாடு விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்

தஞ்சை மாவட்டத்தில் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய முறைப்படி நல்ஏர் பூட்டி விவசாயிகள் வழிபாடு செய்தனர். இதில் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

Update: 2021-04-15 16:55 GMT
தஞ்சாவூர், 

காவிரி பாசன மாவட்டங்களில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை முதல் நாளான தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று நல்ஏர் எனும் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வந்தது. இதன் மூலம் அந்த ஆண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் காலப்போக்கில் விவசாயம் பொய்த்து போனதாலும் எந்திரமயமான தாலும் நல்ஏர் பூட்டும் நிகழ்ச்சி பல கிராமங்களில் மறந்து விட்டாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

சூரிய பகவானை வழிபட்டனர்

டெல்டா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்ட திருவிழா தற்போது ஒரு சில கிராமங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. அங்கும் 300 ஏர் கலப்பை 400 ஏர் கலப்பை வைத்து செய்துவந்த நிலையில் கால்நடைகள் இல்லாததால் ஒருசில இயற்கை முறைகளை மட்டுமே வைத்து விழாவானது நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் டவுன் கரம்பை, பள்ளி அக்ரஹாரம். வேங்குராயன் குடிக்காடு, திருவையாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் நல்ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சித்திரை முதல் நாளில் விவசாயிகள் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சாகுபடி நிலம், ஏரிகளில் பழங்கள், அரிசி, விதை நெல், நவதானியம் உள்ளிட்டவைகளை வைத்து கணபதி பூஜை, வருண பூஜை செய்து சூரிய பகவானை வழிபட்டனர்.

குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்

பின்னர் விளைநிலத்தில் வேண்டிக்கொண்டு ஏர் கலப்பையால் உழுது விதை நெல் தூவி விவசாய பணிகளை தொடங்கினர். விவசாயம் செழிப்பதற்கான இந்த சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதன் மூலம் மழைபெய்து விவசாயம் செழித்து விவசாயிகளும், மக்களும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் இருப்பதாக கூறுகின்றனர். தஞ்சை மாவட்ட பகுதிகளில் நேற்று நடந்த நல்ஏர் பூட்டும் நிகழ்ச்சியில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டனர். பல நூறு ஆண்டுகளாக மன்னர்கள் காலத்தில் தங்க கலப்பையால் ஏர்பூட்டும் நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில் தற்போது ஒரு சில கிராமங்களில் மட்டும் இந்த நல்ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆச்சாம்பட்டி ஏரி

தஞ்சை மாவட்டம் ஆச்சாம்பட்டி கிராமத்தில் தமிழ்ப்புத்தாண்டான நேற்று விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி நல்ஏர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். இதையொட்டி ஆச்சாம்பட்டி ஏரியில் விவசாயிகள் நவதானியங்களை தூவி வழிபட்டனர். ஏர் கலப்பை, உழவுமாடு மற்றும் விதைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி அருகே நாச்சியார்பட்டி கிராமத்தில் நல்ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வயலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருவையாறு அருகே பனையூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் விளை நிலத்தில் கணபதி பூஜை, சூரியநாராயண பூஜை, வர்ண பூஜை, பூமி பூஜை உள்ளிட்ட பூஜைகளை செய்தனர். நெல், பயறு, எள்ளு போன்ற தானியங்களை வயலில் தெளித்து நல்ல மகசூல், நீர்நிலை பெருக வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

மேலும் செய்திகள்