உடுமலை பகுதியில் சொட்டுநீர்ப்பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை பகுதியில் சொட்டுநீர்ப்பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.;
போடிப்பட்டி, ஏப்.16-
உடுமலை பகுதியில் சொட்டுநீர்ப்பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு படிப்படியாக குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையே முக்கிய காரணமாகக் கூறும் விவசாயிகள் தற்போது சொட்டுநீர்ப்பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாழை சாகுபடியைப்பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரையிலான ஓராண்டு காலத்தில் பருவமழை, காற்று, கோடை என எல்லா பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பருவமழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கோடையில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற சூழலில் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும்போது வாழைமரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் கயிறுகள்
இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியைக் கைவிட்டு காய்கறிகள் உள்ளிட்ட மாற்றுப் பயிர்களுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் தற்போது நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் வாழை சாகுபடியில் ஈடுபடும்போது இழப்பைத் தவிர்க்க முடியும். அந்த வகையில் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் போது குறைந்த நீரில் தொடர்ச்சியாக பாசனம் மேற்கொள்ள முடிவதால் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
அதுபோல காற்றிலிருந்து வாழை மரங்களைப் பாதுகாக்கவும் புதிய யுக்திகளை பயன்படுத்துகிறோம். அதன்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஊன்றுகோல்கள் கொடுத்து பாதுகாப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊன்று கோல்கள் அமைத்து மற்ற வாழைகளையெல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் மூலம் எதிர் எதிர் திசைகளில் ஒன்றுடன் ஒன்றை இணைத்து கட்டி விடுகிறோம். இவ்வாறு கட்டுவதால் எந்த திசையிலிருந்து காற்று பலமாக வீசினாலும் வாழைகளுக்கு சேதம் ஏற்படுவதில்லை. பாதுகாப்புக்கான செலவும் குறைகிறது. இவ்வாறு புதிய யுக்திகளைப்பயன்படுத்துவதால் வாழை சாகுபடி லாபகரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.