மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் கொழுமம், கண்ணாடி புதூர், சோழமாதேவி, கடத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அமராவதி நீர்நிலை அருகில, பல்வேறு சிவன் கோவில்கள், கடந்த காலங்களில் வாழ்ந்த முன்னோர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில்கள் இன்றளவும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி குங்குமவள்ளியம்மன் உடனமர் குலசேகர சாமி கோவில் இங்குள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் வருடந்தோறும் சித்திரை மாதம் 1, 2, 3-ந்தேதிகளில் அதிகாலை 6 மணிக்கு சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழும் அதிசயம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த வருடமும் சித்திரை மாதமான முதல் 2 நாட்களில் இங்குள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி லிங்கம் மீது, காலை 6 மணி முதல் 6.40 வரை, சூரிய ஒளி விழும் அதிசயம் நடைபெற்றது. அப்போது கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கோவில் அர்ச்சகர் உள்பட உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள், இந்த அதிசய காட்சியை கண்டு, மனமுருகி வேண்டிக்கொண்டனர்.