முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்ட்டரில் கொல்ல சதி? கைதான போலீஸ் அதிகாரியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்

முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரை தொடர்புபடுத்தி 2 பேரை போலி என்கவுன்ட்டரில் போட்டு தள்ள கைதான போலீஸ் அதிகாரி சதி திட்டம் தீட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-04-15 11:12 GMT
சச்சின் வாசே

வெடிகுண்டு கார் வழக்கு

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 5-ந் தேதி அந்த வெடிகுண்டு காரின் உரிமையாளரான வியாபாரி ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்குகள் தொடர்பாக மும்பை குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேயை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த வெடிகுண்டு கார் சம்பவத்தை தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம், மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ராஜினாமா உள்ளிட்ட பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி விட்டன. ஆனால் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டதற்கான காரணம்?, ஹிரன் மன்சுக் எதற்காக கொல்லப்பட்டார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

போலி என்கவுன்ட்டர் திட்டம்

ஏதோ மிகப்பெரிய சதி திட்டத்திற்காக முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. தரப்பு கூறியது. இந்தநிலையில் சம்பவம் நடந்து 2 மாதத்தை நெருங்கிய நிலையில், தற்போது தீவிர விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. போலி என்கவுன்ட்டர் திட்டத்திற்காக அங்கு வெடிகுண்டு நிரப்பிய கார் நிறுத்தப்பட்டு இருப்பதாக வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே என்கவுன்ட்டர் பெஷலிஸ்ட் ஆவார். தானேயில் உள்ள அவரது வீட்டில் ஒருவரின் பாஸ்போர்ட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியது. பாஸ்போர்ட்டில் உள்ள நபர் மற்றும் இன்னொரு நபர் ஆகிய 2 பேரை போலி என்கவுன்ட்டரில் போட்டு தள்ள சச்சின் வாசே திட்டமிட்டு இருந்துள்ளார். அவர்கள் 2 பேரை முகேஷ் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் வழக்குடன் தொடர்புபடுத்தி போலி என்கவுன்ட்டரில் சுட்டு தள்ளி வழக்கை முடித்து வைக்க கருதியுள்ளார்.

பாராட்டு பெற...

இதன் மூலம் பாராட்டுகளையும், பதவி உயர்வையும் பெற அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த சதி திட்டம் பலனளிக்காமல் புஸ்வானமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே வெடிகுண்டு கார் வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது போலி என்கவுன்ட்டர் கோணத்தில் விசாரிக்க தொடங்கி உள்ளனர். வெடிகுண்டு கார் வழக்கு மராட்டிய அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், தற்போது அது போலி என்கவுன்ட்டர் சதி திட்டத்திற்காக செய்யப்பட்டது என்று கூறப்படுவது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்