எலச்சிபாளையம் அருகே போட்டோகிராபர் மர்மசாவு - கொலையா? போலீசார் விசாரணை
எலச்சிபாளையம் அருகே போட்டோகிராபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே வண்டிநத்தம் அம்மாசிப்பட்டி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). போட்டோகிராபர். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் மேனகா (15), நவநீதா (13), கவியரசி (7) என்ற 3 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் சரவணன் நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க மறைவான பகுதிக்கு சென்றாராம். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் யாரோ ஒருவர் சாலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சாலையில் இறந்து கிடந்தது சரவணன் என தெரியவந்தது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கும், எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். சரவணனின் உடலில் சிறு காயங்களும், சிராய்ப்பும் இருந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை லீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எலச்சிபாளையம் அருகே போட்டோகிராபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.