சேலத்தில் கொரோனாவுக்கு ஏட்டு இறந்த அதிர்ச்சியில் தந்தை-தங்கை சாவு

கொரோனாவுக்கு ஏட்டு இறந்த அதிர்ச்சியில் தந்தை-தங்கை சாவு

Update: 2021-04-14 22:58 GMT
சேலம்:
சேலத்தில் குஜராத் மாநில போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலியானதை கேள்விப்பட்ட அதிர்ச்சியில் அவரது தந்தையும், தங்கையும் பரிதாபமாக இறந்தனர்.
கொரோனாவுக்கு பலி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்புக்காக சேலம் மாவட்டத்துக்கு குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார் 85 பேர் வந்தனர். இவர்கள் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரகனூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டனர்.
இவர்களில் போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சூர்யவன்ஷி (வயது 50) என்பவருக்கு கடந்த 6-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜிதேந்திர சூர்யவன்ஷி பரிதாபமாக இறந்தார்.
தந்தை, தங்கை சாவு
இதுகுறித்து குஜராத்தில் உள்ள அவருடைய உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் ஜிதேந்திர சூர்யவன்ஷியின் தந்தை தவுலத்பாப் மற்றும் தங்கை மங்கல்பான் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து திடீரென மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தவுலத்பாப் மற்றும் மங்கல்பான் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? என குஜராத் மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடல் தகனம்
அதைத்தொடர்ந்து சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஜிதேந்திர சூர்யவன்ஷியின் உடலை சேலத்திலேயே தகனம் செய்ய அவருடைய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஜிதேந்திர சூர்யவன்ஷியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்