நீத்தார் நினைவு நாள்: பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு படையினருக்கு வீர வணக்கம்

நீத்தாா் நினைவு நாளையொட்டி பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு படையினருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

Update: 2021-04-14 21:44 GMT
ஈரோடு
மும்பையில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 71-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தீ தடுப்பு தொண்டு நாள் வார விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஏப்ரல் மாதம் 14-ந்தேதி என்பதால் தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் நீத்தார் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி தலைமை தாங்கி, நீத்தார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். இதில் மாவட்ட தீயணைப்பு உதவி அதிகாரி வெங்கடாசலம், ஈரோடு நிலைய அதிகாரிகள் மயில்ராஜ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இதேபோல் பவானி, மொடக்குறிச்சி, சென்னிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு படை அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்