ஒரே நாளில் 5 கோவில்களில் பூக்குழி திருவிழா
தளவாய்புரம் பகுதிகளில் ஒரேநாளில் 5 கோவில்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் பகுதி கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அன்று இரவு 7 மணிக்கு முகவூர் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் முன்பும், 2.45 மணிக்கு தளவாய்புரம் வடக்கு மாரியம்மன் கோவில் முன்பும், 3 மணிக்கு மாஞ்சோலை காலனி வடகாசி அம்மன் கோவில் முன்பும், 3.15 மணிக்கு கொமந்தபுரம் நடு மாரியம்மன் கோவில் முன்பும், நேற்று அதிகாலை 5 மணிக்கு செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் முன்பும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் மாலை தளவாய்புரம் முதலியார் தெரு முத்து மாரியம்மன் கோவில் முன்பு பல்வேறு சுவாமி மற்றும் அம்மன் வடிவங்களில் முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மி அடித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தளவாய்புரம் போலீசார் செய்திருந்தனர்.