மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நடத்த வேண்டும் உதவி ஆணையரிடம் சிவனடியார்கள், பக்தர்கள் மனு

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நடத்தக்கோரி உதவி ஆணையரிடம் சிவனடியார்கள், பக்தர்கள் மனு அளித்தனர்.;

Update: 2021-04-14 21:12 GMT

மலைக்கோட்டை, 
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நடத்தக்கோரி உதவி ஆணையரிடம் சிவனடியார்கள், பக்தர்கள் மனு அளித்தனர்.

சித்திரை திருவிழா ரத்து

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் கடந்த ஆண்டு தெப்பத்திருவிழா, சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

அதே போல இந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், கோவிலில் தினமும் நடைபெறும் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் கோவில் உதவி ஆணையர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

கோரிக்கை மனு

இந்தநிலையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள பக்தர்கள், சிராப்பள்ளி சீர்பாதம் அமைப்பினர், சிவனடியார் கூட்டமைப்பினர் என்று பல்வேறு தரப்பினரும் நேற்று கோவில் உதவி ஆணையரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் அரசு விதிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்திலேயே திருவிழாக்கள் வழக்கம் போல் நடந்து வருகிறது. எனவே மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை கோவில் வளாகத்திலேயே ஆகம விதிகளின்படி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணையர் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்