பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் சிலா் பாலம் முன்பு நின்று செல்பி எடுத்தனா்

பவானிசாகா் அணை பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனா். சிலா் பாலம் முன்பு நின்று செல்பி எடுத்தனா்.

Update: 2021-04-14 21:01 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் முன்புறம் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, கொலம்பஸ், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சாதனங்கள் மற்றும் அழகிய புல்தரைகள், பார்வையாளர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக ஓய்வுக்கூடங்கள் உள்ளன. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அணை பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 10-ந் தேதி முதல் பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டது. நேற்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். அப்போது பூங்கா மூடப்பட்டு கிடந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அணை பூங்கா எதிர்புறம் உள்ள மீன் கடைகளில் மீன் வறுவல் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். பூங்கா திறக்கப்படாததால் அணை முன்புள்ள பாலத்தின் மீது நின்று செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

மேலும் செய்திகள்